
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். திமுக மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி கடந்த மார்ச் மாதம் கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து, இன்று வரை ஆத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்குதல், கையுறை, சானிடைசர் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார். இதுதவிர திமுக நிர்வாகிகள் கிராமம் கிராமமாக சென்று உணவு பொருட்களை வழங்க உத்தரவிட்டார்.

இதுபோல திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமார் பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆகஸ்ட் 7ம் தேதி கலைஞரின் நினைவு தினம் அன்று இ.பெ.செந்தில்குமார் ஏழை, எளிய மக்களுக்கும், மருத்துவமனைக்கும் சென்று நோயாளிகள் மற்றும் செவிலியர்களுக்கு போர்வைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதுபோல அவரது துணைவியார் மெர்சி செந்தில்குமார் சீலப்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைதொடர்ந்து அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் திமுக தொண்டர்கள் கோவில்களுக்கு சென்று இ.பெ.செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பூரண குணமடைய பல்வேறு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.
பழனியில் இளைஞரணி நிர்வாகிகள் கார்த்திக், அய்யப்பன் ஆகியோர் முடி காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தனர். இதில் பழனி முன்னாள் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாஸ்கரன் தலைமையில் இ.பெ.செந்தில்குமார் பூரண குணமடைய சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதுபோல ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.புதுக்கோட்டை ரமேஷ் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.நாகலட்சுமி மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிவபுரியில் உள்ள ஸ்படிக லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆத்தூர் மற்றும் பழனி சட்டமன்ற தொகுதியில் நூற்றுக்கணக்கான கோவில்களில் திமுகவினர் இ.பெ.செந்தில்குமார் பூரண குணமடைய வழிபாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.