Skip to main content

“காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” - பெ. சண்முகம் வலியுறுத்தல்!

Published on 18/01/2025 | Edited on 18/01/2025
P. Shanmugam Emphasis The police should also be prosecuted 

தலித் இளைஞர் கழுத்து அறுத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 30) என்கிற தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடூரமான இந்த படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தீண்டாமையின் தொடர்ச்சியாகவே இந்த சாதிய வன்கொடுமை நடந்துள்ளது. இந்த தகராறை ஒட்டி சமாதானம் பேசலாம் என்று குற்றவாளிகளிடம் காவலர்களும், ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவர்களின் முன்னிலையிலேயே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. சட்ட ரீதியாகக் காவலர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். மாறாக கொலையாளி தேவேந்திரனிடம் கொலை செய்யப்பட்டவரை அழைத்துச் சென்றதன் மூலம் காவலர்களும் அந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடும் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டுமென்றும், இத்தகைய நிகழ்வுகளில் சட்டத்திற்குப் புறம்பாகக் குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்