வெளிநாடுகளுக்கு வேலை தேடிச்செல்லும் இளைஞர்கள் போலி முகவர்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு உயர்தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளதாக பல முகவர்கள் அழைத்துச் செல்கின்றனர். அதிக ஊதியம் என்றும் ஆசை வார்த்தை கூறி சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்கின்றனர்.
இவற்றை நம்பி பல கனவுகளுடன் வெளிநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களை சிலர் கால் சென்டர், கிரிப்டோகரன்சி போன்ற பணிகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துகின்றனர். இந்த வேலைகளைச் செய்ய மறுக்கும் நபர்களை, அவர்களை அழைத்துச் சென்ற கும்பல் துன்புறுத்துவதாகவும் தொடர்ந்து தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், பணியின் தன்மை உள்ளிட்ட விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசையோ அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களையோ தொடர்பு கொண்டு பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் வெளியுறவுத் துறை அல்லது வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளையும் பின்பற்றி வெளிநாட்டு வேலைக்குச் செல்லலாம்.
வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் 96000 23645, 87602 48625, 044 28515288 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.