
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், ‘ஒரே இலக்கு, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “பொதுவாக நான் பிறந்த நாளை பெரிய அளவில் ஆடம்பரமாக ஆர்ப்பாட்ட விழாவாகக் கொண்டாடுவதில்லை. ஆனால் திமுக தொண்டர்கள் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவது, திமுக அரசின் சாதனைகளை விளக்குவது, திமுக கொள்கைகளை எடுத்துச் சொல்வது போன்ற பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று செயல்படுவார்கள். இந்த முறை என் பிறந்தநாள் வேண்டுகோளாக திமுக தொண்டர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்.
இன்றைக்குத் தமிழ்நாடு தனது உயிர்ப்பிரச்சனையான மொழிப்போரையும், தன்னுடைய உரிமைப் பிரச்சனையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது. இதற்கான உண்மையான நோக்கத்தை திமுக தொண்டர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு என்பது நம் மாநிலத்தின் சுயமரியாதை, சமூக நீதி, சமூக நலத்திட்டங்களைப் பெரிதும் பாதிக்கும். இதனை திமுக தொண்டர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தைத் தொடங்கினோம். இப்போது கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவு குரல் வந்துள்ளது.
இதனைப் பார்த்த மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை என்று கூறிக்கொண்டே அதற்கான எல்லா முன்னெடுப்புகளையும் எடுத்துக்கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான தொகுதிகளைக் குறைக்க மாட்டோம் என்று தான் என மத்திய அரசு சொல்கிறது. ஆனால் மற்ற மாநில தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என சொல்லமாட்டிகிறார்கள். நாம் கேட்பது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரிக்காதீர்கள். நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை வஞ்சிக்காதீர்கள். அப்படி நடைபெற்றால் தமிழ்நாடும், திமுகவும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. நாம் உறுதி ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் நலனையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத் தர மாட்டோம் தமிழ்நாட்டிற்காக ஒன்றுபட்டுப் போராடுவோம் தமிழ்நாடு போராடு தமிழ்நாடு வெல்லும்” எனப் பேசியுள்ளார்.