
அண்மையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய கல்வித்துறை அமைச்சரின் இந்த பேச்சு கண்டனத்தை பெற்றதோடு தமிழகத்தில் மீண்டும் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் சென்னை ஐஐடியில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருவதாக இருந்தது. திடீரென அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அவருக்கு பதிலாக கலந்து கொள்ள ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் வர இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தர மறுத்து 'இந்தி' படித்தால் தான் தருவோம் என ஆணவத்துடன் 'பிளாக் மெயில்' செய்யும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பாக கருப்புக்கொடி காட்டுவதாக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்விக்கான நிதியை தருவோம் என பாஜகவின் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் ஆணவத்தோடு பேசி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியை திணிக்க முயலும் சூழ்ச்சிக்கு எதிராக மாணவர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கடந்த 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 68 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் இதை திசை திருப்பும் விதமாக தொடர்ச்சியாக பேசி வருகிறார்கள்.
''ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு மாணவர் கூட்டம் நடத்திய கண்டன பேரணி என்பது சென்னை சவுகார்பேட்டை இந்து தீயாலஜிகல் பள்ளியின் முன் 1938 ஆம் ஆண்டு ஆண்களும் பெண்களுமாக நடத்திய போராட்டத்தின் இன்றைய பதிப்பு போல இருந்தது. 5000 கோடியல்ல 10,000 கோடி கொடுத்தாலும் நாங்கள் முன்மொழி ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதில் கையெழுத்து கையெழுத்து போட மாட்டோம்'' என்று தமிழக முதல்வர் எழுச்சியுடன் முழங்கி இருக்கிறார்.
வட மாநிலங்களில் பேசப்பட்டு வந்த 20 க்கும் மேற்பட்ட அந்த மக்களின் தாய் மொழிகளை கடந்த ஒரு நூற்றாண்டில் இந்திய எனும் ஆதிக்க மொழி படையெடுப்பால் சிதைத்துள்ளது. இந்நிலையில் வரும் 28ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தருவதாக இருந்த தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த எமது கூட்டமைப்பு உள்ள பல்வேறு அமைப்புகளும் திட்டமிட்டிருந்த நிலையில் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. எனினும் ஐஐடியில் நடைபெறும் விழாவில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் கலந்து கொள்ள போவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதான் என்ற ஒருவரை மட்டும் கண்டிப்பது அல்ல தமிழ்நாட்டுக்கு நிதி தரும் மறுத்து, இந்தியையும், தேசிய கல்விக் கொள்கையையும் திணிக்க முனையும் ஒன்றிய அரசை கண்டித்து இந்த போராட்டம் என்பதால் ஒன்றிய இணை அமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவது என மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.