மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்து அண்மையில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. முன்னதாக டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரிட்டாப்பட்டி கிராம மக்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். அதேநேரம் தமிழக சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
மேலும் சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'தான் முதல்வர் பதவியில் இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க முடியாது' என உத்தரவாதம் கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரிட்டாபட்டி கிராம மக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்ததோடு, அரிட்டாபட்டிக்கு வருகை தரும்படி கோரிக்கை வைத்திருந்தனர்.
முதல்வரும் அரிட்டாப்பட்டிக்கு வருவதாக உறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று அரிட்டாபட்டியில் நிகழ்ந்த பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த பாராட்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான் முதல்வராக இருக்கும் வரை அத்திட்டம் வராது என உறுதியளித்திருந்தேன். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களால் கிடைத்த வெற்றி என்று மக்கள் கூறினார்கள். ஆனால் இது நமக்கு கிடைத்த வெற்றி. டங்ஸ்டன் திட்டம் ரத்து தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். எனக்கு நன்றி தெரிவிப்பதை விட மக்களாகிய உங்களுக்கு தான் நன்றி கூற வேண்டும். கிராம மக்களின் அன்புக் கட்டளையை ஏற்று இங்கே வந்துள்ளேன். மக்கள் சக்தி மூலம் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளோம். மக்கள் விரோத செயல்களை தொடர்ந்து மத்திய பாஜக அரசு செய்து வருகிறது'' என்றார்.