தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு 13-ஆம் தேதி ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
'அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் சேர தயாராக உள்ளனர்' என அப்பாவு பேசியதை எதிர்த்து அதிமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பாபு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று இந்த வழக்கானது நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி ஏற்கனவே அப்பாவுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என மனுதாரர் தரப்பில் என வாதம் முன்வைக்கப்பட்டது.'எங்களுக்கு சம்மன் கிடைக்கவில்லை. நாங்கள் எந்த உள்நோக்கத்தோடும் நிராகரிக்கவில்லை. உதாசீனம் செய்யவில்லை. நீதிமன்றத்தை நாங்கள் மதிக்கிறோம். சம்மன் வந்து சேரவில்லை. வந்து சேர்ந்திருந்தால் ஆஜராகியிருப்போம்' என்று அப்பாவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் 'அப்பாவுக்கு இந்த விவரங்கள் அனைத்தும் தெரியும்' செய்தியாளர் மத்தியில் கூட ஒருமுறை இது தொடர்பாக பேசியிருக்கிறார். எனவே அவருக்கு இதுகுறித்து தெரியாது என சொல்ல முடியாது. வேண்டுமென்றே சம்மனை நிராகரித்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டது. அப்போது நீதிபதிகள், சம்மனை நிராகரிக்கவில்லை என்று சொல்கிறீர்கள் எப்பொழுது ஆஜராவீர்கள் என அப்பாவு தரப்புக்கு கேள்வி எழுப்பினர். நீதிமன்றம் எந்த தேதியில் சொன்னாலும் அந்த தேதியில் ஆஜராக தயாராக இருக்கிறோம் என அப்பாவு தரப்பு தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து பதினோராம் தேதி வழக்கை ஒத்திவைத்தது அன்று ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அப்பாவு தரப்பில் இரண்டு நாட்களில் உடனே ஆஜராக முடியாது கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை கேட்டுக் கொண்ட நீதிபதி வரும் 13ம் தேதி சபாநாயகர் அப்பாவும் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.