பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''அரசியலில் தாம் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு மறைந்த பேராசிரியர் அன்பழகன் தான் காரணம். என்னுடைய பணியைத் தொடர்ந்து பாராட்டினார்.
அவரது வழியில் நாம் நடைபெற வேண்டும் என நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். கலைஞருடைய ஆற்றல் ஸ்டாலினின் செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் பேராசிரியர் அன்பழகன். மு.க.ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் நூறு ஸ்டாலின்கள் வரவேண்டும் என என்னை மேடையிலே பாராட்டியவர் பேராசிரியர் தான். வாரிசு வாரிசு என்று இன்னைக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்களே அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்திய போது, கல்வெட்டு போல எனக்கு பாராட்டு பத்திரம் கொடுத்தவர் பேராசிரியர் தான். அவர் சொன்னார் 'கலைஞருக்கு மட்டுமல்ல எனக்கும் ஸ்டாலின் வாரிசு தான். எனவே அடுத்த தலைமுறையை பாதுகாக்கின்ற கடமை அவருக்கு உண்டு' என்று துணிச்சலாக சொன்னவர் பேராசிரியர் தான்'' என்றார்.