Skip to main content

“முதலமைச்சர் எனது கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல் பூசி மொழுகுகிறார்..” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/12/2022 | Edited on 25/12/2022

 

ADMK Leader edappadi palanisamy statement

 

"தூங்குபவர்களை எழுப்பலாம் - தூங்குவது போல் நடிப்பவர்களை தலைகீழாக நின்று போராடினாலும் எழுப்ப முடியாது" எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

மேலும் அதில் அவர், "தூங்குபவர்களை எழுப்பலாம் - தூங்குவது போல் நடிப்பவர்களை தலைகீழாக நின்று போராடினாலும் எழுப்ப முடியாது." கஞ்சா விற்பனை முழுமையாக தடுத்து நிறுத்தப்படும் என்றும், அதற்காக ஆப்பரேஷன் கஞ்சா 2.0 ஒன்றை ஆரம்பித்த தமிழ்நாடு காவல்துறை, ஆப்பரேஷன் கஞ்சா 2.0 மூலம் கஞ்சா கடத்தலையும் மற்றும் விற்பனையையும் எவ்வளவு தடுத்தது என்றும், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றும், எத்தனை குற்றவாளிகள் பிடிபட்டனர் என்றும், எவ்வளவு பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டது என்பதையும் இந்த அரசு விளக்க வேண்டும். மேலும், ஆப்பரேஷன் கஞ்சா 2.0 வெற்றி எனில், ஏன் தற்போது ஆப்பரேஷன் கஞ்சா 3.0 நடவடிக்கையினை காவல்துறை தொடங்கியுள்ளது என்றும், காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் விளக்க வேண்டும்.


தமிழ்நாடு முழுவதும் கஞ்சாவை வயது வித்தியாசம் இல்லாமல் 18 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, நான்கு பேர் அடங்கிய கஞ்சா போதை கும்பல், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆங்காங்கே உள்ள கடைகளில் நுழைந்து, கடை உரிமையாளர்களை கத்தி மற்றும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவர்களைத் தாக்கி, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலில் சுமார் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் இரண்டு சிறுவர்களை கைது செய்துள்ளதாகவும், மற்றொரு சிறுவனையும், தினேஷ்குமார் என்பவனையும் தேடி வருவதாகவும் செய்திகள் வருகின்றன. அதே போல், இரண்டு நாட்களுக்கு முன்பு குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் கவுதம் என்பவர் திருமுடிவாக்கத்தில் சொந்தமாக பல் மருத்துவமனை நடத்தி வருவதாகவும், ஒருசில நாட்களுக்கு முன்பு மருத்துவர் கவுதம் அவர்களுடைய மருத்துவமனைக்குச் சென்ற கஞ்சா கர்ணா உள்ளிட்ட மூன்று நபர்கள், மருத்துவரிடம் ஐம்பதாயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், மாமூல் தர மறுத்த மருத்துவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றுவிட்டனர் என்றும், தப்பி ஓடிய குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருவதாகவும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன.

 

இவ்விரு சம்பவங்களிலும் குற்றவாளிகள் கஞ்சா போன்ற போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரத்தில் நடந்த சம்பவத்தில், போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக இரண்டு சிறுவர்களைக் கைதுசெய்து கணக்கு காட்டியுள்ளனர் காவல்துறையினர். கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்து, தண்டனை பெற்றுத் தந்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது. கஞ்சா எங்கிருந்து கடத்தப்பட்டு வருகிறது? இதுவரை முழுமையாக கண்டுபிடிக்க முடியாதது ஏன்? கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? போதைப் பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கைதுசெய்ய தடுப்பவர்கள் யார்? கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்பதில் ஐயமில்லை.


கடந்த 19 மாதகால திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நடைபெற்ற, ஒருசில காவல் துறையினரின் அத்து மீறல்களையும், அதனால் வழக்குகளின் பெயரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அகால மரணமடைந்ததையும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவையும், போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளது குறித்தும், அதிமுக சார்பில் நான் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகளின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தெரிவித்திருந்தேன்.


நடைபெறும் படுபாதக செயல்களைத் தடுக்க இயலாத, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எனது கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், தவறுகளை மறைக்கும் வகையில் பூசி மொழுகும் வேலையை செய்து வருகிறார்கள். கடந்த 20.12.2022 அன்று, சென்னை, திரு.வி.க. நகரைச் சேர்ந்த 26 வயதுடைய தினேஷ்குமார் என்பவர் அடையாறு துரைப்பாக்கம் பகுதியில் பேருந்தில் செல்லும்போது ஒரு பயணியிடம் இருந்து செல்போனை திருடியதாக பொதுமக்களால் பிடிக்கப்பட்டு துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். தினேஷ்குமாரோடு பயணம் செய்த அவருடைய நண்பர் ஒருவர், திருடிய செல்போனை எடுத்துக்கொண்டு ஓடியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


காவல் துறையினர் கடுமையாக விசாரித்ததில், தினேஷ்குமார் அவருடைய மனைவிக்கு போன்செய்து, தன்னுடைய நண்பரிடமிருந்து செல்போனை வாங்கிவரச் சொல்லி இருக்கிறார். தினேஷ்குமாரின் மனைவி கௌசல்யா, செல்போனை வாங்கி துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவுடன், தினேஷ்குமாரை விடுவித்த நிலையில், அவர் மிகுந்த உடல்நிலை பாதிப்புடன் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்ற தினேஷ்குமாருக்கு உடல்நிலை மிகவும் நலிவடைந்ததால், அவரை அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், தினேஷ்குமார் ஏற்கெனவே மரணமடைந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.


துரைப்பாக்கம் காவல் துறையினர் தன் கணவர்மீது தாக்குதல் நடத்தியதால்தான் மரணமடைந்தார் என்று அவரது மனைவி திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தினேஷ்குமாரின் மர்ம மரணம் குறித்து இந்த அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், துரைப்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒருசில காவலர்களை இடமாற்றம் செய்திருப்பதாகவும் கண்துடைப்பு நாடகம் நடத்தியுள்ளது. உள்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல் துறையினர் இல்லை என்பதை இதுபோன்ற தொடர் லாக்அப் மரணங்கள் நிரூபிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்