ஆத்தூர் அருகே நிலத்தகராறில் லாரி ஓட்டுநரை பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சீனிவாசன் (42). லாரி ஓட்டுநர். இவருடைய அத்தை பங்காரு (57). சீனிவாசன் மற்றும் பங்காரு ஆகிய இரு குடும்பத்திற்கும் பொதுவாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை சீனிவாசன் மட்டுமே ஏக போகமாக அனுபவித்து வந்தார். இதில், தங்களுக்கும் பங்கு இருப்பதாகவும், நிலத்தை சரிபாதியாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் பங்காருவின் வாரிசுதாரர்கள் கேட்டு வந்தனர். இது தொடர்பாக அவர்களிடையே தகராறு இருந்து வந்தது.
இதுகுறித்து பங்காருவின் வாரிசுகள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினர். அதன்பேரில், கெங்கவல்லி காவல்நிலைய காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். இதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. அதையடுத்து, அவர்களை நீதிமன்றத்திற்குச் சென்று உரிய பரிகாரம் தேடிக்கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பி விட்டனர்.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) காலை சீனிவாசன், மோட்டார் சைக்கிளில் ஆத்தூரில் இருந்து கடம்பூருக்குச் சென்று கொண்டிருந்தார். பைத்தூர் கணவாய்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது, பங்காருவின் பேரன்கள் மணிகண்டன் (31), விஜய் (28) ஆகிய இருவரும் சீனிவாசனை வழிமறித்தனர்.
அப்போது, அவர்கள் நிலத்தை பங்கு பிரிப்பது தொடர்பாக கேட்டு தகராறில் ஈடுபட்டனர். திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனிவாசனை சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு கழுத்து, மார்பு, கை ஆகிய இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சீனிவாசன், நிகழ்விடத்திலேயே இறந்தார்.
கத்தியால் தாக்கும்போது சீனிவாசன் தன்னை காப்பாற்றுமாறு கூச்சல் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் நிகழ்விடம் வருவதற்குள் விஜய், மணிகண்டன் ஆகிய இருவரும் அவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.
தலைமறைவாகிவிட்ட விஜய், மணிகண்டன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.