கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி கடந்த 10-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஏரியில் இருந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திருமுட்டம் வட்டப்பகுதிகளில் 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அதே நேரத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கி வருகிறது. இந்த ஏரியில் நச்சு கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கடந்த 2018-19 ஆண்டில் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுகள் இருக்க கூடாது என உலக சுகாதார மையம் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது என்றும், ஆனால் வீராணம் ஏரியில் 1 லிட்டர் நீரில் 17.72 மைக்ரோகிராம் முதல் 19.38 கிராம் வரை நச்சுகள் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபனிடம் கேட்டபோது, “வீராணம் ஏரியை சுற்றி எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை, நச்சுகழிவுகள் கலக்க வாய்ப்பில்லை. இவர்கள் தண்ணீர் மிகவும் குறைந்த நேரத்தில் எடுத்துள்ளார்களா? என்று தெரியவில்லை. தற்போது வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் நல்ல முறையில் உள்ளது. இதனை விவசாயத்திற்கு அளித்து வருகிறோம். தண்ணீர் குறித்த ஆய்வை நாங்கள் மேற்கொள்ள முடியாது” என்றார்.
இந்த தகவல் குறித்து சென்னை மெட்ரோ வாட்டர் செயற்பொறியாளர் ராம்ஜியிடம் கேட்டபோது, “ஒவ்வொரு முறையும் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும்போது தண்ணீரை பலமுறைகளில் சுத்திகரித்து அனுப்பி வருகிறோம். வீராணம் ஏரியில் எந்த ஒரு நச்சும் இல்லை. எனவே தண்ணீரை சோதனை செய்து தான் எடுக்கிறோம்” என்றார்.
அதேபோல் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் உதவிப்பொறியாளர் அனந்தராயன் கூறுகையில், “வீராணம் ஏரியை சுற்றி எந்த நச்சு கழிவுகள் கலக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த தகவல் வெளிவந்த பிறகு பொதுமக்களுக்கு அச்சத்தை தீர்க்கும் வகையில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை சாம்பிளுக்கு எடுத்துச் சென்று ஆய்வகத்தில் கொடுத்துள்ளோம். ஆய்வகத்தில் இருந்து ரிசல்ட் வந்தவுடன் இதுகுறித்து முழுத்தகவலும் வெளியிடப்படும்” என்றார்.
வீராணம் ஏரியில் நச்சு உள்ளது என்ற தகவல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை விரைவில் மாவட்ட நிர்வாகம் கலைய செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.