அரசு ஆணைப்படி மேல்நிலைத்தொட்டி இயக்குனர்கள், துப்புரபுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமையன்று புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் ரூ.2720, துப்புரவுப் பணியாளர்கள் ரூ.4560 மட்டுமே ஊதியமாகப் பெற்று வருகின்றான். இத்தகைய குறைந்த ஊதியத்தைக்கொண்டு குடும்பத்தை நடத்த முடியாது என்பதால் அரசு ஆணைப்படி மேல்நிலைத் தொட்டி இயக்குனர்களுக்கு ரூ.5618-ம், துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.9,234-ம் குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.50 ஆயிரம், மாத ஓய்வூதியம் ரூ.2000 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து இணைப்புக்குழு (சிஐடியு) மாநிலத் தலைவர் ப.சண்முகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா, துணைச் செயலாளர் க.சிவக்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் முருகேசன், முகமதுகனி, ஹனிபா, அழகப்பன், சேகர், வீரப்பன் மற்றும் 15 பெண்கள் உட்பட 106 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத் தலைவர் எம்.அசோகன், தையல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலளர் சி.மாரிக்கண்ணு ஆகியோர் பேசினர்.