வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மகன் வெங்கடேசன் திண்டுக்கல் நகரில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி குடும்பத்துடன் சென்னை சென்றார் வெங்கடேசன் அப்போது வீட்டின் படுக்கை அறையில் புகுந்த திருடர்கள் 50 பவுன் நகை மற்றும் 4 லட்சத்தை திருடி சென்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் விசாரணை செய்து வந்தனர். மேலும் எஸ்பி சக்திவேல் உத்தரவின்படி டிஎஸ்பி மணிமாறன் தலைமையில் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்ஏ மகேஷ், சிறப்பு எஸ்.ஏ.களான நல்ல தம்பி, வீரபாண்டி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில்தான் திண்டுக்கல் அருகே உள்ள பெரிய பள்ளபட்டி சேர்ந்த பாண்டியை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது.... அமைச்சர் மகன் வெங்கடேசனிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தேன். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். இதனால் எனது நண்பர் பூதிபுரம் பாலாஜிநகரை சேர்ந்த வினோத்குமார், வெள்ளோடு ரவிக்குமார் ஆகியோருடன் அமைச்சரின் மகன் வெங்கடேஷ் வீட்டுக்குச் சென்று ஜன்னல் கம்பியை அறுத்து பணம் மற்றும் நகைகளை திருடினோம். திருடியதில்
90 ஆயிரத்தை செலவு செய்து விட்டோம் எனக் கூறினார்.
அதனடிப்படையில் அமைச்சர் மகன் வெங்கடேஷிடம் டிரைவராக வேலை பார்த்த பாண்டி, வினோத் குமார், ரவிக்குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 3 லட்சத்து 10 ஆயிரமும் 50 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். இப்படி அமைச்சர் மகன் வீட்டில் திருடு போன பணத்தையும் நகைகளையும் போலீசார் கண்டு பிடித்ததை கண்டு பொதுமக்களே எஸ்.பி.சக்திவேலை பாராட்டி வருகிறார்கள்.