விருதுநகர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. தற்போது, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, வச்சக்காரப்பட்டி கிராமத்தில் உள்ள சாய்நாத் பட்டாசு ஆலையில் மூலப் பொருட்கள் கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். படுகாயமடைந்தவர்களுக்கு உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது இரசாயனக் கலவையின்போது ஏற்படும் உராய்வுதான். பட்டாசுத் தொழிற்சாலைகள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததும், பாதுகாப்பு விதிமுறைகளை தொழிற்சாலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை அரசு கண்காணிக்காததும்தான் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம். பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. இதனைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே மேற்படி விபத்திற்கு காரணம்.
இனி வருங்காலங்களிலாவது இந்தக் கடமையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.