தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. ஆளுநரின் இச்செயலுக்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முடிவெடுக்க சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் இன்று காலை கூடிய சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக பங்கேற்காத நிலையில், காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட 10 கட்சிகள் பங்கேற்றன. இக்கூட்டத்தில் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற தீர்மானம் இயற்றப்பட்டது.
இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "அதிமுகவை பொறுத்தவரை, நீட் தேர்வை நேற்றும் நாங்கள் எதிர்த்தோம்: இன்றும் எதிர்த்துக்கொண்டு இருக்கிறோம்; நாளையும் எதிர்த்துக்கொண்டு இருப்போம். நீட் விலக்கு அளிக்கும்வரை அதிமுக உறுதியாக எதிர்க்கும். இந்த நீட் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சியில்தான் கொண்டுவரப்பட்டது" எனத் தெரிவித்தார்.
மேலும், ஆளுநரை திரும்பப்பெற வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "இந்திய அரசியலமைப்புபடி ஒரு கவர்னர் ஆற்ற வேண்டிய பணியை ஆளுநர் செய்துகொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.