நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ''இங்கு வாக்குகேட்டு வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, பாஜகவின் தலைவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது எனச் சொல்லும் கட்சிக்கு ஓட்டு கேட்டவர் முதல்வர் ஸ்டாலின். மானமிக்க, மண்ணை நேசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் தண்ணி தரவில்லை, உங்களுக்கு எதற்கு ஓட்டு? கூட்டணியும் இல்லை, சீட்டு இல்லை என்று முடிவு எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் காங்கிரசுக்கு 10 சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு தமிழரின் ஓட்டும் உனக்கு இல்லை. என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும். அப்படி தோற்கடித்தால்தான், ஏன் நம்மை தோற்கடித்தார்கள் என அவர்கள் சிந்திப்பார்கள். காவிரியில் மக்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தோம்; மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவில்லை; மீத்தேன் ஈத்தேன் என நிலத்தை நஞ்சாக்கினோம்; முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர மறுத்தோம் அதனால் நம்மை தோற்கடித்து விட்டார்கள் என உணர வேண்டும்.
தமிழக மக்களிடம் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களுடைய உரிமைக்காக பேச வேண்டும். உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் உருவாக்காத வரை நம்முடைய உரிமையை மீட்க முடியாது. கல்வி மாநில உரிமை அதை எடுத்துட்டு போனது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் சேர்ந்து கொண்டு நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறது. ஆனால் இதை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. மறந்துடாத, விடாதே, அவர்களுக்கு ஓட்டு போடாதே எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.
மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் எனச் சொல்லுகிறது காங்கிரஸ். அணைக் கட்டியே தீர வேண்டும் எனச் சொல்கிறது பாஜக. இதற்கு இங்கே இருக்கின்ற பாஜக தலைவர்கள், வேட்பாளர்களின் கருத்து என்ன? பேச மாட்டார்கள். காரணம் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனப் பாஜக சொன்னால் அங்கு காங்கிரஸ் ஜெயிக்கும். காங்கிரஸ் சொன்னால் கர்நாடகாவில் பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக மக்களின் உரிமையை பலிகொடுக்க தயாரானவர்கள் இவர்கள். என் உரிமைக்கு, உணர்வுக்கு, உயிருக்கு நிற்காத உனக்கு என் ஓட்டு எதுக்கு என்று கேள்வியை எழுப்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத இவர்களுக்கு எதற்கு நமது வாக்கு என்ற சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்'' என்றார்.