நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு அரசியல் கட்சியினர் தங்களின் விருப்ப சாமிகளுக்கு யாக பூஜை நடத்த படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு யாக பூஜையை குடும்பத்தினரோடு வந்து நடத்தினார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.
தமிழகத்தில் கடந்த மாதம் 18 ம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்தது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார் ராஜா. வாக்கு எண்ணிக்கை வரும் 23 ம் தேதி நடக்கவுள்ள நிலையில் கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலை கோயிலில் தனது மனைவியுடன் வந்து, எதிரிகளை வெல்வதற்கும் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்கும் சத்ரு சம்ஹார திருச்சதை யாகமும் சுப்பிரமணியர் ஹோமமும் நடத்தினர்.
அங்கிருந்து கும்பகோணம் வந்தவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், "அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் பேசிய கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான் என பேசியதில் உள்நோக்கம் இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் பேசும்போது நான் ஒரு இந்து குடும்பம் என்று சொல்கிறார். அவர் இந்து என்பதை நான் ஏற்க முடியாது. கமல் தான் ஒரு இந்து என பொய் சொல்கிறார். அவருக்கு தான் ஒரு அறிவாளி என்கிற மாயை என்னம் உண்டு. ஆங்கிலேயர்கள் கொடுத்த பெயரை வைத்துக்கொள்ளக்கூடாது என்பார். அதே நேரம் இயேசுவின் குரல்களை பரப்பி வருகிறேன் என மகாராஷ்டிராவில் கமல் கூறியிருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. மக்கள் நீதி மையம் கட்சி துவங்கியதற்கு சர்ச்சுகளின் பின்னணி இருப்பதாக எனக்கு தெரிய வருகிறது. இந்து மதத்தையும் அதன் அடையாளங்களையும் மறைப்பதற்காக கமல் தேர்தலை பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது." என்றார்.