வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை என பிரிக்கப்பட்ட பின், இதுவரை பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை அனைத்தும் மாவட்ட நிர்வாகிகளை தங்களது அமைப்புக்கு, கட்சிக்கு அதிகாரபூர்வமாக நியமனம் செய்து அறிவிக்காமல் செயல்பட்டு வருகிறது. சில கட்சிகள் மட்டும் அறிவித்து செயல்படுகின்றன.
அதன்படி ஆளும்கட்சியான அதிமுக, பாஜக, காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் மாவட்ட வாரியாக நிர்வாகிகளாக யாரை நியமனம் செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். திமுகவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லையென்றாலும் ஏற்கனவே கிழக்கு, மத்திய, மேற்கு என பிரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் நியமினம் செய்யப்பட்டதை அப்படியே திருப்பத்தூர், இராணிப்பேட்டை, வேலூர் மாவட்ட நிர்வாகிகளாக மாற்றி செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அறிவிக்காத கட்சிகள் புதிய நிர்வாகிகளை அறிவிக்கும் பணியில் தீவிரமாகவுள்ளனர். அதில் அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக உள்பட அனைத்து கட்சிகளும் நிர்வாகிகளை தேர்வு செய்து வருகின்றனர். ரஜினி மக்கள் மன்றமும் 3 மாவட்டத்துக்கும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய பட்டியல் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் விஜய் மக்கள் மன்றம் மற்றும் ரசிகர் மன்றத்தின் சார்பாக இராணிப்பேட்டை மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தினசரிகளில் சிலர் விளம்பரம் செய்துள்ளனர். இந்த விளம்பரத்தைப் பார்த்து பழைய வேலூர் மாவட்ட செயலாளர் வேல்முருகன், இது பொய்யான தகவல். இன்னும் யாரையும் நியமனம் செய்யவில்லை என மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.