நாளை முதல் சென்னையிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரின் சில பகுதிகளிலும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றே தலைமை செயலாளர் நடத்திய ஆலோசனையில் சென்னையில் வாகன கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை நேற்று சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில், தமிழகத்தில் முதன்முதலாக கரோனாவிற்கு உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் காவலர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஏ.கே.விஸ்வநாதன், சென்னை காவல் துறையில் 788 பேர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்களில் 300க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 39 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளை அமலுக்கு வரும் பொதுமுடக்கத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். காய்கறி, மளிகை பொருட்களை அருகில் இருக்கும் கடைகளிலேயே வாங்கிக் கொள்ளவேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலக பணியாளர்கள் அடையாள அட்டையை வைத்துக் கொள்ள வேண்டும். சென்னைக்கு வெளியே தினசரி வேலை சென்றுவர அனுமதி ரத்து, சென்னையில் உள்ள பகுதிகளிலும் சோதனை தீவிரப்படுத்த திட்டம். வெளியே இருந்து சென்னைக்கு வருபவர்கள் சிறப்பு அனுமதி பெற்று வரவேண்டும். ஏற்கனவே இ-பாஸ் இருந்தால் புதுப்பிக்க வேண்டும். திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் இருந்தால் செல்லாது. மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே இ-பாஸ் பெற்றுள்ளீர்கள் என்றால் புதுப்பிக்க வேண்டும்.
போலி இ-பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் ட்ரோன் கேமராக்கள் மூலம் வெளியே சுற்றுபவர்களை கண்காணிப்போம். சென்னை நகருக்குள் மட்டும் 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன எனவே பொதுமக்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.