'ஓபிஎஸ் போல் எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை ஆட்டி அசைக்க முடியாது' என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''அதிமுக ஏறத்தாழ 30 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா என 30 ஆண்டு காலம் ஆட்சிபுரிந்து சிறந்த அடித்தளத்தை அமைத்து தந்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாத காலமாகிறது. தமிழகத்தில் ஏதாவது ஒரு திட்டத்தினை கொண்டு வந்திருக்கிறார்களா? அதிமுக காலத்தில் முடிவற்ற பணிகளை தற்போது திமுகவினர் துவக்கி வைக்கின்றனர். திமுக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆனால் திட்டங்கள் அனைத்தும் முடங்கியுள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக ஆட்சி காலத்தில் திருச்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் 385 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. அதேபோல சத்திரம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. திருச்சி ஓடத்துறை பாலம் ரூபாய் 30 கோடியில் கட்டப்பட்டது. இதுபோன்ற 17 திட்டங்கள் ஜெயலலிதா காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுகதான் கொண்டுவந்ததாக மார்தட்டிக் கொள்கிறது. ரூ 82 கோடி செலவில் கட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள அரிஸ்டோ பால பணிகளை உடனடியாக நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். ஆட்சி பொறுப்பேற்று 15 மாதம் கடந்தும் என்ன செய்துள்ளீர்கள்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற திட்டத்தையும் திமுக அரசு செய்யவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். தொழிற்சாலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 என நிறைவேற்ற முடியாத திட்டங்களை திமுக அரசு அறிவித்தது. ஆட்சியில் இருக்கும் போதே மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி அறிவிப்பை அதிமுக வெளியிட்டது. ஆனாலும் ஆட்சிக்கு வந்து திமுக இதுவரை நிறைவேற்றவில்லை. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அரசு அறிவித்தது.
மக்கள் சேவையே மகேசன் சேவை கொள்கையாக கொண்டது அதிமுக. இங்கு அதிமுகவிற்கு தலைவனாக வரவில்லை தொண்டனாக வந்துள்ளேன். ஜெயலலிதா அரசுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் நாங்கள் தான். அதிமுக ஜா –ஜெ என ஈரணியாக பிளவுபட்ட போது எதிர் அணியிலிருந்தவர் ஓபிஎஸ் தான். அவர் எப்படி விசுவாசமாக இருக்க முடியும்? அதிமுக தலைமை கழகத்தில் இருந்த கம்ப்யூட்டர் டேபிள்களை அடித்து நொறுக்கியவர்கள் ஓபிஎஸ் அணியினர். தற்போது ஒன்று சேரலாம் வாருங்கள் என்கிறார். எப்படி அவருடன் கூட்டுசேர முடியும்? ஒன்றிணைய முடியும்? ஓபிஎஸ் போல் எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை ஆட்டி அசைக்க முடியாது. அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரும் தொண்டர்கள் அதிமுகவில் உள்ளனர்'' என்றார்.