
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாங்கல் சாலையில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கணித ஆசிரியராக இருப்பவர் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவருக்கும், பொறுப்பு தலைமை ஆசிரியருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொறுப்பு தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடற்கல்வி ஆசிரியருக்கு ஆதரவாக, அருகில் உள்ள மற்றொரு அரசுப் பள்ளி ஆசிரியர், அந்தத் தலைமை ஆசிரியரை செல்போனில் தொடர்பு கொண்டு அறுவெறுக்கத்தக்க வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்து, அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த நிலையில் செல்போன் ஆடியோவில் பேசிய ஆசிரியர்கள் இரண்டு பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரனை தொடர்பு கொண்டு கேட்ட போது, “அந்த பள்ளியை தொடர்பு கொண்டு கேளுங்கள்” என்றார், மேலும், நியூஸ் சொல்ல வாய்ப்பில்லை என இணைப்பை துண்டித்துக் கொண்டார்.