![NLC mine accident; 17 people were injured!](http://image.nakkheeran.in/cdn/farfuture/xJMyS701ynaT6gu1nGqNCU0BfxUYoxoaBqrycsD4es4/1663158871/sites/default/files/inline-images/th_3175.jpg)
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில், மகாலட்சுமி என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாவது சுரங்கத்தில், சுரங்க பணிக்காக, அந்நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் வேலை ஆட்களை அழைத்துக் கொண்டு, சுரங்கத்தில் அமைக்கப்பட்ட ரேம்ப் வழியாக சுரங்கத்தின் கீழே சென்று கொண்டிருந்தது. அப்போது சுரங்கத்தின் கீழ் பகுதியில் இருந்து நிலக்கரியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட, மண்ணை ஏற்றிக்கொண்டு அதே நிறுவனத்துக்கு சொந்தமான டிப்பர் லாரி ஒன்று சுரங்கத்தின் மேல் பகுதி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது கொளக்குடி பகுதியில் அமைந்துள்ள புதிய ரேம்ப் வழியாக வந்து கொண்டிருந்தபோது, இரண்டு வாகனமும் நேருக்கு நேர் பலத்த சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அந்தச் சத்தத்தை கேட்டு, அப்பகுதியில் பணிபுரிந்த என்.எல்.சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இவ்விபத்தில் வேலைக்கு சென்ற வெளி மாநிலத்தைச் சேர்ந்த 17 பேர் தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயங்களுடன் நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு, அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஐந்து நபர்கள் பலத்த காயத்துடன், உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர்களை மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி பீம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்தில் தொடர்ச்சியாக பல்வேறு விபத்துக்கள் நடப்பதால், சுரங்கத்தில் பணிபுரியும் ஆட்களுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.