கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில், என்.எல்.சி முதன்மை நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் முன்னிலையில், நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள லிக்னைட் அரங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி சபா.ராஜேந்திரன், பண்ருட்டி தி.வேல்முருகன், விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், புவனகிரி அருண்மொழித்தேவன், சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், “என்.எல்.சி நிறுவனம் கடந்த காலங்களில் நிலங்களை கையகப்படுத்தும் போது வழங்க வேண்டிய நியாயமான இழப்பீட்டுத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை ஆகியவற்றை இதுவரை வழங்கவில்லை. மேலும் பொறியாளர் தேர்வில் 299 பேரில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. குறிப்பாக நிலங்களைக் கொடுத்த ஒருவருக்குகூட நிரந்தர வேலை வழங்கவில்லை. எனவே நிலம் கையகப்படுத்தும் என்.எல்.சி குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கர் ஒன்றுக்கு 50 லட்சம் இழப்பீட்டு தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட நிலம் கையகப்படுத்தப்படவுள்ள வானதிராயபுரம், வடக்குவெள்ளூர், கரிவெட்டி, கத்தாழை, வளையாமதேவி உள்ளிட்ட 14 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நிரந்தர வேலை, அதிகபட்ச இழப்பீடு ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் என்.எல்.சி நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்களுக்கு சாலை, குடிநீர் வசதி பள்ளிக்கூடங்களில் கட்டிட வசதி, மருத்துவமனைகள் அமைத்து தர வேண்டும் எனவும் எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர்.
இதனை தொடர்ந்து என்.எல்.சி முதன்மை நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் பேசுகையில், "இங்கு கலந்து கொண்ட அனைவரையும் எனது குடும்பமாகவே கருதுகிறேன். உங்களது குடும்பத்தில் ஒருவனாக உங்கள் குறைகளை கேட்டு அறிவதில் மிகுந்த கவனமுடன் இருந்தேன். இந்நிகழ்ச்சி எனக்கு மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தியது. என்.எல்.சி நிறுவனம் தமிழகத்தில் உருவாகி பிற மாநிலங்களில் தனது நிறுவனத்தை விரிவுபடுத்தி வருகிறது. எனக்கு தமிழ் மொழி தெரியாது. ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசிய விதங்கள் வைத்து அவர்களின் நீண்ட நாள் பிரச்சனைகள் எனக்கு நன்றாக தெரியவருகிறது. கடந்த காலங்களில் உரிய இழப்பீடு தொகையை முழுமையாக வழங்காததும் வேலை வாய்ப்பு வழங்காததும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக வீடு, நிலம் கொடுத்த பெரும்பாலானவர்கள் இழப்பீட்டுத் தொகை, நிரந்தர வேலை குறித்து பேசினார்கள். எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்து குறைகளையும் நிறைவேற்றித் தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என பதிலளித்தார்.
அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், "கடந்த காலங்களில் என்.எல்.சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகை மற்றும் வேலைவாய்ப்பினை முழுமையாக வழங்காதது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் காலங்களில் பாதிக்கப்படுகின்ற அனைத்து கிராமங்களுக்கும் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் தமிழக முதல்வர் மத்திய அரசுடன் பேசி உரிய நடவடிக்கைகளையும், விவசாயிகளைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்" என்று கூறினார்.
இதனிடையே இந்த கருத்து கேட்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள பா.ம.க மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், சண்.முத்துகிருஷ்ணன், கார்த்திக்கேயன், செல்வ.மகேஷ் உள்ளிட்டோர் வந்தபோது மாவட்ட செயலாளர்களை மட்டும் அனுமதிப்பதாக காவல்துறையினர் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் கையில் பாதைகளை ஏந்தி கொண்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராகவும், என்.எல்.சிக்கு எதிராகவும் கண்டன முழுக்கங்கள் எழுப்பினர். காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ம.கவினர் ஒரு கட்டத்தில், உள்ளே செல்ல முற்பட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய கோரியும், காவல்துறையை கண்டித்தும், கும்பகோணம் - சென்னை சாலையில், இந்திரா நகர் ஆர்ச் கேட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் அங்கு வந்த மயிலம் தொகுதி பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன்பின்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன், நெய்வேலி இல்லத்தில் பா.ம.கவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.
பேச்சுவார்த்தையின் போது, "விவசாயிகள் இல்லாமல் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தை ரத்து வேண்டும், என்.எல்.சி இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதாக கூறப்படும் கிராமங்களுக்கு, மாவட்ட ஆட்சி தலைவர் நேரடியாக சென்று கிராமம் தோறும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் நிலம் கையகப்படுத்தக் கூடாது, ஏக்கருக்கு ஒரு கோடி வழங்க வேண்டும், நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, வட்டாட்சியர் சுரேஷ்குமார் மற்றும் என்.எல்.சி நில எடுப்பு அதிகாரிகள், வருவாய் துறையினர், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.