சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன், "நிவர் புயல் காரணமாக நாளை (25/11/2020) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று (24/11/2020) அதீத கனமழை பெய்யும். அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 'நிவர்' புயல் காரணமாக 7 மாவட்டங்களில் 100 கி.மீ. முதல் 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். நாளை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். அதேபோல் மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி, காரைக்காலிலும் 100 கி.மீ முதல் 110 கி.மீ. வரை வேகத்தில் நாளை காற்று வீச வாய்ப்புள்ளது.
'நிவர்' புயல் நாளை மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும். கடல் அலை இயல்பை விட 2.மீ உயரத்தில் எழும்பும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். நாளை இரவு வரை கடல் கொந்தளிப்புடன் இருக்கும்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை தாம்பரத்தில் 9 செ.மீ. மழை பதிவானது. சென்னை எம்.ஜி.ஆர். நகர், வட சென்னையில் தலா 8 செ.மீ., விமான நிலையம், ஆலந்தூரில் தலா 7 செ.மீ., கேளம்பாக்கத்தில் 6 செ.மீ., தரமணி மற்றும் பெரம்பூரில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது" இவ்வாறு மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.