“குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல், வேலை எதுவும் செய்யாமல், ஊராரின் ஏளனப் பார்வைக்கு வேறு ஆளாகி, வழக்கையும் சந்தித்து வருவது எத்தனை கொடுமையானது தெரியுமா? இந்த மன அழுத்தம்தான் பொது இடங்களில் ஒருமாதிரியாக நடக்கச்செய்து என்னை வேடிக்கைப் பொருளாக்கிவிட்டது. உளவியல் பிரச்சனைகளுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டது.”
-நிர்மலாதேவியின் இந்த உள்ளக்குமுறல் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.
கடந்த 9-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்ற வளாகத்தில் மயக்கம் போட்டு விழுந்த நிர்மலாதேவி, உடல் நிலை மற்றும் மனநிலை காரணமாகவோ என்னவோ, கடந்த 23-ஆம் தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
‘நாளைதானே தீபாவளி! இன்று அதிகாலையிலேயே இது என்ன சத்தம்?’ என்று அருப்புக்கோட்டை ஆத்திபட்டி ஏரியாவில் நிர்மலாதேவி தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்து பார்த்தார்கள். அப்போது, வீட்டிலிருந்த பொருட்களை தெருவில் வீசிக்கொண்டிருந்தார் நிர்மலாதேவி. வீட்டுக்கு எதிரில் நின்றுகொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரரின் கார் மீது கற்களை வீச, கார் கண்ணாடி உடைந்தது.
அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், நிர்மலாதேவியின் இச்செயலை அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்துக்கு தகவலாகத் தெரிவித்தனர். உடனே, காவல் ஆய்வாளர் அன்னராஜ் நிர்மலாதேவியின் வீட்டுக்கு விரைந்தார். நிர்மலாதேவியின் அண்ணன் ரவியும் அங்கு வர, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது அந்த வீடு. பலதடவை கூப்பிட்டும் நிர்மலாதேவி கதவைத் திறக்கவே இல்லை. தற்போது, நிர்மலாதேவியின் வீட்டுக்கு வெளியே பாதுகாப்புக்காக காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தனக்கு போனில் மிரட்டல் வருவதாகவும், தனது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என்றும் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியனிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார் நிர்மலாதேவி. பசும்பொன் பாண்டியனும் கவர்னரை மிரட்டுவதற்கு ஆளும்கட்சியினருக்கு இந்த வழக்கு ரொம்பவே பயன்படுகிறது என்று பேட்டியெல்லாம் அளித்தார்.
உண்மையிலேயே நிர்மலாதேவிக்கு என்னதான் ஆச்சு?