நிர்மலா தேவியை அதிமுக அமைச்சர் ஒருவர் மிரட்டுகிறார் என்று நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான புகாரில் தொடர்புடையவர்கள் கடந்த 18ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் 18ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருப்பசாமி, முருகன் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து நிர்மலாதேவிக்கான ஜாமீனை ரத்து செய்து, பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி பரிமளாதேவி வழக்கு விசாரணையை 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவியை கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் நீதிபதி பரிமளா, நிர்மலா தேவியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், நிர்மலாதேவியை ஒரு கடத்தல்காரர் போல் சிபிசிஐடி போலீசார் மறைத்து அழைத்து வந்து ஆஜர்படுத்தியுள்ளனர். நேற்று இரவு என்னிடம் பேசிய நிர்மலா தேவியை, இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்து சரண் அடையுங்கள் என்று கூறியிருந்தேன்.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார், அவர் நீதிமன்றத்திற்கு வரும்போதே கைது செய்து அழைத்து வந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மதுரையைச் சேர்ந்த ஒரு அமைச்சர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரானால் தனது குடும்பத்தை சீரழித்து விடுவதாகவும் தனது குழந்தைகளை கடத்திவிடுவதாகவும், தன்மீது ஆசிட் ஊற்றி கொலை செய்து விடுவதாகவும் கூறி மிரட்டி வருவதாக நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்தான் நேற்று இரவு என்னிடம் பேசிய நிர்மலா தேவியை, இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்து சரண் அடையுங்கள் என்று கூறியிருந்தேன். அதன்படி ஆஜராக இருந்த அவரை போலீசார் கைது செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
மதுரையைச் சேர்ந்த அமைச்சர் என்றால் யார் என்று கேட்டதற்கு, வருடத்தில் பாதி நாட்கள் அவர் தாடி வைத்திருப்பார். மீதி நாள் சாதாரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.