மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேளச்சேரி குருநானக் கல்லூரி கலை விழாவில் நேற்று கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கேள்வி:-இந்தியன் படத்துக்கு பின்னும் லஞ்சம், ஊழல் ஒழியவில்லையே?
பதில்:- ஊழலும் லஞ்சமும் புதிது அல்ல. ரோம் நாட்டில் கூட இருந்து இருக்கிறது. சொல்ல முடியாத துன்பங்களையெல்லாம் மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். அதையெல்லாம் கடந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வர வேண்டும். ஊழலை செய்ய எப்போதும் 4 பேர் தயாராக இருப்பார்கள். ஒன்றிரண்டு பேர் தவறு செய்யலாம். ஒட்டுமொத்த மக்களும் அந்த தவறை செய்யக் கூடாது.
ஓட்டு வாங்கணும் என்ற ஆசையில் தவறு செய்பவர்கள் 234 பேர் தான். ஆனால் ஓட்டுக்கு காசு வாங்குபவர்கள் கோடிக்கணக்கில் ஆகிவிட்டால் நாடு விளங்காது. என்னுடைய நண்பர்கள் சில பிரச்சினைகளுக்காக கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வேண்டும் என்று சொன்னபோது நான் அதை ஆதரிக்கவில்லை.
நான் சொன்ன டுவிட்டே சிலர் புரியாது என்பார்கள். புரியலன்னு சொன்ன டுவிட்டை இப்போது சொல்கிறேன். 20 பேர் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை தடை செய்வதை விட்டு கொஞ்சம் தூரம் நடந்து சென்று ஜார்ஜ் கோட்டையில் உள்ள 234 பேர் விளையாடும் போட்டியை நிறுத்த வேண்டும். இதை சொன்னபோது புரிய வில்லை என்றார்கள். இவ்வாறு பதில் அளித்தார்.