தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் மன்னார்குடி ஆசாத் தெருவில் உள்ள பாவா பஹ்ருதீன் என்பவரது வீட்டில் 5 மணி நேரம் தீவிர சோதனையிட்டதோடு வீட்டில் இருந்த லேப்டாப், ஹார்டுடிஸ்க், பிரிண்டர்ஸ், செல்ஃபோன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை எடுத்துச் சென்றதோடு பஹ்ருதினையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நிழல் உலக தாதா ஒருவரின் ஆதரவாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது தென்மண்டல ஐஜியின் காரை உடைத்தும், காவல்துறையினரைத் தாக்கியும் சிலர் அராஜகத்தில் ஈடுபட்டனர். இது சம்மந்தமாக பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பயங்காரவாத அமைப்பினர் முத்துப்பேட்டையில் முகாமிட்டுள்ளதாகவும், கோவையில் அமைய உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தை முத்துப்பேட்டையில் அமைக்க வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில், தேசிய புலனாய்வுத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மன்னார்குடியில் ஆசாத் தெருவில் பாவா பஹ்ருதீன் என்பவரது வீட்டை முற்றுகையிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் சந்தேகப்படும்படியாக இருந்த பாவா பஹ்ருதீனின் லேப்டாப், ஹார்டுடிஸ்க், பிரிண்டர்ஸ், செல்ஃபோன் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். அதோடு அருண்மகேஷ், விக்னேஷ் உள்ளிட்ட 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் பாவா பஹ்ருதினை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தேசிய புலானய்வு துறையினரின் இந்த திடீர் ரெய்டால் மன்னார்குடி மட்டுமின்றி சுற்றுப்புற பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாகியுள்ளது.