
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. மீனவர்களின் விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்வதால், மீனவர்களின் வாழ்வாதாரதமும் பாதிப்படைந்து வருகிறது. மீனவர்களை விடுவிக்கக் கோரி இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார். ஆனாலும், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை தொடர்ந்தே வருகிறது.
இந்த சூழ்நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 22 ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் அதிகாலை 2 மணியளவில் தனுஷ்கோடிக்கும், வடக்கு மன்னார் கடற்பரப்புக்கும் இடையே கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர். மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதற்கு மீனவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மீனவர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு மற்றும் இதில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடலூரில் மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி தவெக சார்பில் காவல்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக கடலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சியின் தலைமை அமைத்துள்ளது. அடுத்த வாரத்தில் இந்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
அண்மையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.