"பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2,500 ரொக்கப் பணமும், பொங்கல் பரிசு தொகுப்புகளும் வழங்கப்படும்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனையடுத்து வீடு வீடாகப் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் இந்த டோக்கனை அ.தி.மு.க.வினரே நேரடியாக விநியோகம் செய்வதாக ஆதாரத்துடன் எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளனர். இதை நிரூபிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன் முகாசிபிடாரியூர் பகுதியில் பொங்கல் பரிசு டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் நேரில் சென்று வழங்காமல், அ.தி.மு.க.வினர் வீடு வீடாகச் சென்று விநியோகித்துள்ளனர்.
இதைக் கண்டித்து தி.மு.க ஒன்றியச் செயலாளர் பிரபு, முகாசிபிடாரியூர் தி.மு.க ஊராட்சி செயலாளர் ஆறுமுகம், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொன்னுசாமி, சதீஷ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இன்று 30-ஆம் தேதி காலை ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் காலனி பிரிவில் (சென்னிமலை-பெருந்துறை ரோட்டில்) திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்துறை மெயின் ரோடு என்பதால் போராட்டத்தின் இடையூறால் வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடம் நடந்த இந்தச் சாலைமறியல் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பெருந்துறை டி.எஸ்.பி செல்வராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்துக்கு வந்த அவர், சாலை மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதிகாரிகள் மூலம் இனி டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதை ஏற்று சாலை மறியல் கைவிடப்பட்டது.