Skip to main content

புதிய குற்றவியல் சட்டங்கள்; பொதுமக்களிடம் கருத்து கேட்பு!

Published on 13/01/2025 | Edited on 13/01/2025
new laws tn govt Ask the public for feedback

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை 1ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன. அதே சமயம் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களின் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சத்தியநாராயணன், தலைமையிலான ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பில்,  “பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (மத்திய சட்டம் 45/2023), பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (மத்திய சட்டம் 46/2023), மற்றும் பாரதிய சாக்ஷ்யா அதிநியம், 2023 (மத்திய சட்டம் 47/2023) ஆகிய புதிய குற்றவியல் சட்டங்களை ஆய்வுசெய்து அதன் பரிந்துரைகளை மாநில அரசுக்கு சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவானது மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு தனது பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பிக்கும்போது, அனைத்து தரப்பினர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும். எனவே, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் இணையதளம் மூலம் மாநில திருத்தங்கள் தொடர்பான தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க கோரி அழைப்பு விடுக்க இக்குழு முடிவு செய்துள்ளது. இந்த 3 குற்றவியல் சட்டங்கள் குறித்து, கருத்துக்கள் அல்லது ஆலோசனைகளை குழுவின் குறிப்பிட்ட வரம்புகளுக்குட்பட்டு சமர்ப்பிக்க விரும்பும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் ஆங்கிலம் அல்லது தமிழில் https://www.omc-crl-laws2024.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க கோரப்படுகிறது என்று இதன்மூலம் அறிவிப்பு வழங்கப்படுகிறது.

அவ்வாறு இணையதளத்தில், தங்கள் ஆலோசனையின் மீது விரிவான முறையீட்டு மனுவினை சமர்ப்பிக்க விரும்பினால் கருவி உதவிக்குறிப்பில் (Tool Tip) குறிப்பிடப்பட்டுள்ள வடிவமைப்பை (Format) கடைப்பிடிக்க வேண்டும்; இல்லையெனில், அம்மனு பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்