நிறைமாத கர்ப்பிணியான மனைவியைத் தன்னுடனே வைத்துக் கொள்ள இரு சக்கர வாகனத்தில் அழைத்து வரும் வேளையில், சொகுசு வாகனம் மோதி விபத்துக்குள்ளாக 5 வயது குழந்தை, நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாப்பாகுடி அருகேயுள்ள குமாரசாமிபுரத்தினை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாயான மாதவன் துரை. இவருக்கு ராஜேஸ்வரி என்கின்ற நிறைமாத கர்ப்பிணி மனைவியும், பாரதிராஜா எனும் ஐந்து வயது மகனும் உள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான ராஜேஸ்வரி பிரசவத்திற்காக மகனுடன் முக்கூடலிலுள்ள தனது தாய்வீட்டில் இருந்துள்ள நிலையில், ஊரடங்கு நிலையில் தனிமையில் வசித்த மாதவன் துரை தன்னருகிலேயே மனைவியையும், மகனையும் வைத்துக்கொள்ள விரும்பி வியாழக்கிழமை மாலையில் மனைவி, குழந்தையை அழைத்து வர முக்கூடல் சென்றிருக்கின்றார்.
அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு தன்னுடைய ஊரான குமாரசாமிபுரத்திற்கு முக்கூடல்- கடையம் சாலையில் வந்து கொண்டிருக்கையில், எதிரே வந்த சொகுசு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாதவன் துரை மற்றும் குழந்தை பாரதிராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்குள்ள பொதுமக்கள்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணாண ராஜேஸ்வரி. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முக்கூடல் போலீசார், வழக்குப் பதிவு செய்து மூன்று உடல்களையும் கைப்பற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மட்டுமில்லாமல், சொகுசு வாகனத்தில் விபத்து ஏற்படுத்திய வங்கி அதிகாரி சுப்பிரமணியத்தினை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒரே நேரத்தில் விபத்தில் மூன்று உயிர்கள் பலியானதால் அப்பகுதியே சோகமானது.