Skip to main content

கஞ்சா வியாபாரியிடம் மாமூல் வசூல்: டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை.

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகம், சேலம் குரங்குசாவடியில் இயங்கி வருகிறது. இதன் டிஎஸ்பி (காவல்துறை துணை கண்காணிப்பாளர்) ஆக நாமக்கல்லைச் சேர்ந்த குமார் பணியாற்றி வருகிறார்.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ராணி என்ற பெண்ணை கட்டாயப்படுத்தி கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியது, அவரை கைது செய்யாமல் இருக்க மாதந்தோறும் லஞ்சம் வசூலித்து வந்தது ஆகிய புகார்களின்பேரில் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் டிஎஸ்பி குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2017 முதல் 2019 காலக்கட்டத்தில் நடந்துள்ளது.

 

Bribery

 


டிஎஸ்பி குமார், தனக்கு கஞ்சா வியாபாரிகள் கொடுக்கும் லஞ்சப் பணத்தை, தஞ்சாவூரில் வசிக்கும் அவருடைய மைத்துனர் சிபிச்சக்கரவர்த்தி என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தச் சொல்லி, மாமூல் வசூலித்து வந்துள்ளார். ராணி மட்டுமின்றி பல கஞ்சா வியாபாரிகளிடம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் மாமூல் வசூலித்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதற்கு உடந்தையாக, அப்போது சேலம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு ஆய்வாராக பணியாற்றி வந்த சாந்தாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீதும், சிபிச்சக்கரவர்த்தி மீதும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


டிஎஸ்பி குமார், கோவை மாவட்டம் கணபதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குயியிருப்பில் வசித்து வருகிறார். சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு கூடுதல் எஸ்பி சந்திரமவுலி தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் இன்று (ஜூலை 24) டிஎஸ்பி குமார் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். 


இந்த சோதனையில் பல்வேறு சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், நில பத்திரங்களை கைப்பற்றியுள்ளனர். பல்வேறு இடங்களில் டிஎஸ்பி குமார் சொத்துகளை வாங்கி போட்டிருப்பது தெரிய வந்துள்ளது. எனினும் எங்கெங்கு யார் யார் பெயர்களில் சொத்துகள் உள்ளன? என்பதை லஞ்ச -ஒழிப்புத்துறையினர் வெளியிட மறுத்துவிட்டனர். அவருடைய வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்