





















தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் நீங்கலாக கிராம அளவில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது.
கடந்த 9-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மனு தாக்கல் செய்ய 16-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை 19-ந் தேதி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள் மனுதாக்கல் செய்து வந்தனர்.
இந்தநிலையில் அதிமுக சார்பில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்த முதல்கட்ட பட்டியலில் தேனி, சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர கிழக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் இந்த பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.