திருச்சியில் நேற்று தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஐ.ஐ.எம். இயக்குநர் பவன்குமார்சிங் பேசும் போது, தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் ஐஐஎம்மில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேசிய கல்விக் கொள்கை மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
ஐஐஐடி இயக்குநர் நரசிம்ம சர்மா பேசும்போது, “தேசிய கல்விக் கொள்கைப்படி ஐஐஐடியில் பயில்வோர் தங்களது 3வது ஆண்டிலிருந்து தொழிற்சாலைகளில் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. திருச்சி ஐஐஐடியில் விரைவில் பாடப் புத்தகங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படும். ஆசிரியர், மாணவர்கள் பரிமாறிக் கொள்ளும் திட்டத்தின்கீழ் பெங்களூரு ஐஐஎம் நிறுவனத்துடன் திருச்சி ஐஐஐடி ஒப்பந்தம் செய்துள்ளது.
திருவாரூர் மத்திய பல்கலைக் கழகப் பதிவாளர் நாகராஜன் பேசும்போது, “ஆகஸ்ட் 3 ஆம் தேதி நில அளவிலான கருத்தரங்கம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
திருச்சி என்ஐடி இயக்குநர் அகிலா பேசும்போது, “தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் அடிப்படையில், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாணவ, மாணவிகள் படிக்கும் காலத்திலேயே தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் பெறவும் வழி வகை செய்யப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கை, மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரும் அளவில் உதவிகரமாக இருக்கும்” என்றார்.
மேலும், “மத்திய கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஏராளமான வசதிகள் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மத்திய கல்வி நிறுவனங்களில் சேரும் தமிழக மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளது. திருச்சி திருவெறும்பூர் அரசு தொழில் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள மத்திய தேசிய மகளிருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவோரில் பிற மாநிலத்தவர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவாக உள்ளனர்” என்றார். தேசிய மகளிருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மைய உதவி இயக்குநர் சி. சுஜா கலந்து கொண்டனர்.