திருச்சி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநாவுக்கரசர் தேர்தலில் போட்டியிடும் போதே ஒரு வீடோடு சேர்ந்து ஒரு அலுவலகம் திறக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக புதுக்கோட்டையில் இருந்த கட்சியினர் அனைவரும் திருச்சியில் சல்லடையாக தேடினார்கள். கடைசி வரை வீடோடு சேர்ந்து தேர்தல் அலுவலகம் கிடைக்காத நேரத்தில் அரிஸ்டோ ஓட்டல் அருகே பஸ் டிப்போ அருகில் தற்காலிக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
அதன் பிறகு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் நிரந்தரமாக தேர்தல் அலுவலகம் திறக்க வேண்டும் என்று கட்சியினர் இடையே பெரிய எதிர்பார்பு இருந்தது. ஆனாலும் திருநாவுக்கரசர் என்ன நினைத்தாரோ திருச்சி வரும் பொழுது எல்லாம் வழக்கம் போல் பெமினா அலுவலகத்திலே தங்கியிருந்தார்.
இதற்கு இடையில் திருச்சியில் உள்ள ஒரு அமைப்பினர் எங்கள் ஊர் எம்.பி.யை காணவில்லை என்று அரியமங்லம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, அதன் பிறகு அது பெரிய பிரச்சனையாக மாறியது. அதற்கு அடுத்த சில வாரங்களிலே தென்னூர் அருகில் புதிய அலுவலகத்தை திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
அலுவலக திறப்பு விழாவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய, திருநாவுக்கரசர் எம்.பி உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குனேரி பொறுத்த வரையில் அது காங்கிரஸ் தொகுதி, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் வலியுறுத்துவோம். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசி முடிவு பண்ணுவோம் என்றார்.
காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி என்கிற விவாதம் இரண்டு கட்சியினர் இடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில் நாங்குனேரி காங்கிரஸ் தொகுதி, உள்ளாட்சி தேர்தலில் அதிக இடம் கேட்போம் என்று திருநாவுக்கரசர் பேசியிருப்பது. உள்ளாட்சியில் கூட்டணியுடன் இருப்பதற்கு விருப்பம் தெரிவித்து இருப்பதும். காங்கிரஸ் கட்சியில் உள்ளாட்சியில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு இது சந்தோஷத்தை கொடுத்துள்ளது.