![Namakkal New Government Medical College 'Portico' collapses!](http://image.nakkheeran.in/cdn/farfuture/MFsAv1WvXmy07FfsAH-xUIYEXyTcYwV-pCnMr3YeZRU/1604080523/sites/default/files/inline-images/CZCzczzczcz.jpg)
நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரியின் முகப்பு பகுதி திடீரென்று இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே, 25 ஏக்கர் பரப்பளவில் 336 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.கடந்த மார்ச் 5ம் தேதி கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. அடுத்த ஆண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே புதிய மருத்துவக்கல்லூரி கட்டடத்தை திறந்து விட வேண்டும் என்ற முனைப்புடன் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், கல்லூரியின் முகப்பு மண்டபம் (போர்ட்டிகோ) திடீரென்று வெள்ளிக்கிழமை (அக். 30) அதிகாலை 1 மணியளவில் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மெகராஜ், காலை 9.30 மணியளவில் இடிந்து விழுந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.
ஆட்சியர் கூறுகையில், ''போர்ட்டிகோ அமைப்பதற்கான கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு இருந்தது. அதற்காக வைக்கப்பட்டிருந்த கம்புகள் சரியான முறையில் இல்லாததால் பொறியாளர்களே அவற்றை அகற்றுவதற்கான வேலைகளைச் செய்தபோதுதான் போர்ட்டிகோ பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதில் வேறு எந்த பிரச்னையும் இல்லை. யாருக்கும் காயங்கள் இல்லை,'' என்றார்.
கட்டடம் இடிந்து விழுந்ததில் சிலர் காயம் அடைந்ததாகவும், அவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் ஆட்சியர் மெகராஜ் இத்தகவலை மறுத்துள்ளார். மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை நாமக்கல்லைச் சேர்ந்த 'சத்தியமூர்த்தி அன் கோ' என்ற கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. அந்நிறுவன உரிமையாளர் வீட்டில் கடந்த இரு நாள்களாக வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது. இந்நிலையில், கல்லூரியின் முகப்பு மண்டபம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.