உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்களில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதே போன்று ஜம்மு - காஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் கோட்டீஸ்வர் சிங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் நீதிபதி கோட்டீஸ்வர் சிங் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முதல் நீதிபதி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதிபதி மகாதேவனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் அரங்க. மகாதேவன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மகாதேவன் அவர்கள் கடந்த 11 ஆண்டுகளில் சிறப்பான பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். தமிழ் மொழி மீது மிகுந்த பற்றும், தமிழ் மொழியில் புலமையும் கொண்ட மகாதேவன், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் 4 ஆண்டுகள் பணியில் இருக்கப் போகும் நீதிபதி மகாதேவன், சமூகநீதி, மொழி சார்ந்த சிறப்பான தீர்ப்புகளை வழங்கி நீதித்துறை வரலாற்றில் நீங்காத இடம் பிடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.