கடந்த ஜூன் 26- 28ம் தேதி நக்கீரனில் 'அரசுக்கு எதிராக அதிமுக விசுவாசி பி.ஆர்.ஓ' என்ற தலைப்பில் திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியான நாகராஜ பூபதியை பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இச்செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசும் உடனடியாக திண்டுக்கல் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியான நாகராஜ பூபதி மேல் விசாரணையும் வைத்தது. அந்த விசாரணையின் பேரில் மதுரை மாவட்ட ஜே.டி.யான பாஸ்கரன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் விசாரணை செய்து தனது துறை அதிகாரிகளுக்கும் அறிக்கை அனுப்பி வைத்தார். அதோடு அதிமுகவுக்கு விசுவாசமாக இன்னும் இருந்து வருகிறார் என்ற விஷயம் நக்கீரன் மூலமாக அமைச்சர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிந்தது.
அதைத் தொடர்ந்து இரண்டு அமைச்சர்களுமே செய்தித்துறை அமைச்சரான சுவாமிநாதனை தொடர்பு கொண்டு இந்த பி. ஆர்.ஓ. அரசுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு வருவதால் அவரை மாற்றி விட்டு வேறு பி.ஆர். ஓ.வை நியமிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து தான் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக 21.9.2004 ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கும் ஜெகவீராபாண்டியனை இடமாற்றம் செய்து திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கும் நாகராஜ பூபதியின் பணி இடத்தில் பணியமர்த்தம் செய்து ஆணை பிறப்பித்தது.
இதனால் பி.ஆர்ஓ. பூபதி அதிர்ச்சி அடைந்து விட்டார். உடனே சென்னை சென்று பணியிடத்தை நிறுத்தலாம் என்று முயற்சி செய்தும் கூட எடுபடவில்லை அதோடு எந்த ஊருக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள் அல்லது வெயிட்டிங்கில் வைத்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. நக்கீரன் செய்தி எதிரொலி மூலம் பி.ஆர்.ஓ. அதிரடியாக மாற்றப்பட்டு இருப்பதைக் கண்டு பெரும்பாலன பத்திரிக்கையாளர்கள் மற்றும் அலுவலர்கள் கூட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு பத்திரிக்கையாளர்களையும் மதிக்காமல்தான் இந்த பி.ஆர்.ஓ.செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.