![mtc gave happy news of Airline Passengers](http://image.nakkheeran.in/cdn/farfuture/0o8GSGb2utrR5lqFjB5eyPnwXhJtImOuoiAjomzrdko/1732961803/sites/default/files/inline-images/mtc-chennai-bus-airport-art.jpg)
ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 08.30 புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக - புதுவை கடற்கரையில் காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாகக் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 10 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையம் பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது என அறிவிப்பு வெளியாகி இருந்தது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஓடுபாதை முழுவதிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமானச் சேவை ரத்து செய்யப்பட்டன. பல்வேறு விமானங்கள் சென்னையில் இருந்து திருப்பிவிடப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை, விமான நிலையத்தில் இருக்கும் பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னை விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல், பிராட்வே, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து விரைவில் அனைத்து நாட்களிலும் பேருந்து சேவை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.