துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொகுதியான போடி தொகுதியில் இருக்கும், முதுவாக்குடி மலை கிராமத்தில் குடும்ப அட்டை இல்லாத மலைவாழ் குடும்பத்துக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை துணை முதல்வர் உத்தரவின் பேரில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் குதிரைகள் மூலம் அனுப்பி வைத்தார்.
தேனி மாவட்டம், போடியிலுள்ள குரங்கணி அருகே இருக்கிறது முதுவாக்குடி மலை கிராமம். இங்கு ஆதிவாசி பழங்குடியின மக்கள் என 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் குடும்ப அட்டை இல்லாத மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தனர். இந்த விஷயம் துணை முதல்வர் ஓ.பி.எஸ். காதுக்கு எட்டவே, உடனே தனது மகனான தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்திடம் சொல்லி குடும்ப அட்டை இல்லாத பயணாளிகளை குறிப்பெடுத்து அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை உடனே வாங்கி அனுப்புமாறு கூறினார்.
அதன் அடிப்படையில்தான் ரவீந்திரநாத் குமார் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் தேனி மாவட்ட அம்மா பேரவை சார்பில், போடி அருகே உள்ள குரங்கணியில் இருந்து குதிரைகள் மூலம் முதுவாக்குடியில் உள்ள அப்பகுதி மக்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்களை மாவட்ட அம்மா பேரவை சார்பில் நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரின் நேர்முக உதவியாளர் ராஜ அழகணன் மற்றும் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி, அரண்மனை சுப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் அந்த மக்களுக்கு குதிரைகள் மூலம் பொருட்களை அனுப்பி வைத்தனர்.