மழைக்காலங்களில் இதற்கு முன்பு வரை எடுக்கப்படாத பல முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறது சென்னை மாநகராட்சி. சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகள் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவிகளை தூதர்களாக நியமித்து ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகிறார் சென்னை மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ். சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் இந்த பிரச்சாரம் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.

சென்னையில் மழைக்காலங்களில் பரவும் நோய்களை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மாநகராட்சி நிர்வாகம். குப்பைகள் தேங்காமல் இருக்கவும், கொசுக்களின் உற்பத்தியை தடுக்கவும் மாநகராட்சி ஊழியர்களை முடுக்கி வருகிறார் பிரகாஷ். அதே சமயம், சென்னைவாசிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளை பிரச்சார தூதர்களாக நியமித்து, என் வீதி என்ன உன் வீட்டு கழிப்பறையா?, தொட்டிக்கு அழகு குப்பை, கொசுக்களை நசுக்குவோம் என்கிற வாசகங்களுடன் டிஜிட்டல் மற்றும் ஆட்டோ பிரச்சாரத்தை துவக்கியிருக்கிறார்கள்.

மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் நடக்கும் இந்த பிரச்சாரம், 80 சதவீதம் பலனளித்திருப்பதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு ரிப்போர்ட் தந்துள்ளது மாநகராட்சி. அந்த ரிப்போர்ட்டில் உற்சாகமடைந்துள்ள அமைச்சர் வேலுமணி, " 100 சதவீத விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மக்களின் ஒத்துழைப்பில்லாமல் கொசு ஒழிப்பை சாதிக்க முடியாது. மழை நீர் சேகரிப்பையும் மழைக்கால நோய்த்தடுப்பையும் இன்னும் விரிவுப்படுத்துங்கள். அதற்காக, ஆட்டோ பிரச்சாரத்துடன் போஸ்டர் பிரச்சாரத்தையும் செய்யுங்கள் " என உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
அதன் பேரில், தற்போது மாநகராட்சியின் தூதர்களான மாணவிகளின் பிரச்சாரம் சென்னை முழுக்க போஸ்டர்களாக காட்சியளிக்கின்றன.