வாட்ஸ் அப்,பேஸ்புக் எனப்படும் சமூக வலைதள பயன்பாட்டின் விபரீதத்தால் ஈரோட்டில் 13 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் ஓடும் பேருந்தில் அந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்ற வாலிபரை போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும் சிறுமியை கடத்த துணையாக இருந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஈரோட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வெள்ளி வலசு பகுதியைச் சேர்ந்த பதிமூன்று வயது சிறுமி தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாள். அதேபோல் வெள்ளோடு அடுத்த பெரும் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி வேன் டிரைவர் விக்னேஷ் (22) என்பவர் 13 வயது சிறுமியுடன் வாட்சப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார்.
தனியார் பள்ளி வேன் டிரைவர் விக்னேசுக்கு ஏற்கனவே திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது. மேலும் இவர்களது பழக்கம் நெருக்கமானதை அடுத்து கடந்த 22ஆம் தேதி 13 வயது மாணவியை விக்னேஷ் தனது நண்பர்கள் ராஜபூபதி மற்றும் ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து கடத்திச் சென்றுள்ளார். இவர்கள் சென்னைக்கு சொகுசு பேருந்தில் சென்றபோது விக்னேஷ் 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் மாணவியை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் அரச்சலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் விதத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இவர்கள் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் மாணவி உட்பட 4 பேரையும் மீட்டு வந்தனர். இந்த வழக்கு ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் அந்த மாணவியிடம் நடத்திய விசாரணையில், விக்னேஷ் தன்னை ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வேன் டிரைவர் விக்னேஷ் போக்ஷோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு துணையாக இருந்த அவரது நண்பர்கள் ராஜபூபதி, ரமேஷ் ஆகியோர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவர்களையும் கைது செய்தனர். பள்ளி சிறுமிக்கு ஏற்பட்ட இச்சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.