![Motorcycle riders must wear helmets!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Xs0-fhdrl9lmBy-PauZQSrnQSsI-93-rD1Z6Jkra940/1631900714/sites/default/files/inline-images/helmet%20%281%29_0.jpg)
இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில், மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
ஈரோடு மாநகரில் ஹெல்மெட் அணிவதை உறுதிபடுத்தும் வகையில் ஈரோடு டவுன் துணை காவல்துறை சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அவர்களுக்கு தலா ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டது.
வாகன தணிக்கை குறித்து டவுன் துணை காவல்துறை சூப்பிரண்டு ஆனந்த குமார் கூறுகையில்,
எஸ்.பி. சசிமோகன் உத்தரவுபடி, இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்லும் ஒவ்வொருவரும் தங்களை நம்பி குடும்பம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என்ன அவசர வேலையாக இருந்தாலும் நாம் நமது குடும்பத்தினருக்கு தேவை என்று உணர்ந்தால், ஹெல்மெட் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும்.
ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (17/09/2021) ஒரே நாளில் ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 565 பேருக்கு தலா ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும். எனவே, வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வரவேண்டும்" என்றார்.