Skip to main content

தினகரன் அறிவித்த மா.செயலரை மாற்றிய அமைச்சர்

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
தினகரன் அறிவித்த மா.செயலரை மாற்றி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

கோவை புறநகர் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் கோவை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. புறநகர் மாவட்ட அவைத் தலைவர் ஏ.வி.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகித்தார்.

மாநகர் மாவட்டச் செயலர் அம்மன் அர்ச்சுணன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், எட்டிமடை சண்முகம்  கஸ்தூரி வாசு, முன்னாள் அமைச்சர் வேலுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மலரவன், சின்னசாமி, முன்னாள் மேயர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது. இரு அணிகளை இணைக்க பாடுபட்ட அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பது போன்ற தீர்மானகள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன்,  கட்சி நிர்வாகிகளின் பதவிகளை பறிப்பதைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  கோவை மாநகர் மாவட்டச் செயலராக அம்மன் அர்ச்சுணனுக்கு பதிலாக பி.ஆர்.ஜி.அருண்குமார் செயல்படுவார் என்று அறிவித்தார்.

அதிமுகவில் மாவட்டச் செயலர்களை கட்சியின் பொதுச் செயலர் நியமிப்பது தான் வழக்கம். ஆனால், தற்போது யார் பொதுச் செயலர் என்ற குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் புறநகர் மாவட்டச் செயலராக இருக்கும் எஸ்.பி.வேலுமணியே, மாநகர் மாவட்டச் செயலரை மாற்றி அறிவித்துள்ளார். முன்னதாக, புறநகர் மாவட்டச் செயலர் பதவியில் இருந்து வேலுமணியை, அண்மையில் நீக்கி தினகரன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய மாநகர் மாவட்ட செயலராக அறிவிக்கப்பட்ட  பி.ஆர்.ஜி.அருண்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கடந்தவாரம், அம்மன் அர்ச்சுணனை மாநகர் மாவட்டச் செயலராக டிடிவி தினகரன்தான் நியமித்தார். அவரது நியமனங்கள் செல்லாது என்ற கருத்து வலுப்பெறும் நிலையில், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட என்னையே மீண்டும் மாநகர் மாவட்டச் செயலராக்குவதாக கட்சித் தலைமையின் ஒப்புதலுடன் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்” என்றார். மற்றபடி கட்சியில் எந்த குழப்பமும் இல்லை” என்றார்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்