சென்னையில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, சேலம், நாமக்கல், விருதுநகர், ராமநாதபுரம், குமரி, நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைநீர் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள 23 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தேங்கும் மழை நீரை வடிப்பதற்கு 850 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை மறுத்துள்ள தெற்கு ரயில்வே, 20-30 நிமிட இடைவெளிகளில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.