யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் என பலரையும் கடுமையாக விமர்சித்து யூடியூப் சேனலில் பேட்டி அளித்து வந்தார். இந்த நிலையில் பெண் காவலர்கள் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாக பேசியதாக கோவை பெண் உதவி காவல் ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது திருச்சி, சேலம், சென்னை என பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதனிடையே திருச்சி,முசிறி டிஎஸ்பி யாஸ்மின் ஏ.டி.எஸ்.பி கோடிலிங்கத்திடம் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் தற்போது காவல் துறை வாகனத்தில் பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் 10 பெண் காவலர்கள் பாதுகாப்புடன் திருச்சி அழைத்து வரப்படுகிறார். பின்பு திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர் படுத்தப்படவுள்ளார். சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.