தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது" என்று ஆரம்பித்து, பெண் காவலர் ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி கடுமையாகப் பேசத் தொடங்கினார்.
அப்போது எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "செய்தித்தாள்களில் வந்த செய்திகளை வைத்து எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். இப்படி அவர் பேசக்கூடாது. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பேச வேண்டும். அனுமதி பெறாத விசயங்களைப் பற்றிப் பேசுவது மரபு அல்ல. சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசினால், அதிமுக ஆட்சியில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அந்தப் பட்டியலை வெளியிட எங்களையும் அனுமதிக்க வேண்டும். அவரைப் பேச அனுமதியுங்கள். நான் ஓடப்போவதில்லை; அவரைப் பேச அனுமதியுங்கள்" என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
ஆனாலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிக்கு தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.