வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்தின் வீட்டில் இரண்டாவது முறையாக வருமானவரித்துறை சோதனை செய்து வருகிறது. அவரது வீடு, கல்லூரி அலுவலகம், ஆதரவாளர்கள் வீடுகள், துரைமுருகன் உதவியாளர் வீடு என 8 இடங்களில் நடைபெறுகிறது. இதுவரை 18 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை ரெய்டு நடந்துவருகிறது. அவரது இல்லத்தின் முன் காலையில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான துரைமுருகன் ஆதரவாளர்கள் குவிந்திருக்கின்றனர்.
இந்நிலையில் அரக்கோணம் தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் திமுக தலைவர் ஸ்டாலின். பிரச்சாரம் முடிந்ததும் அரக்கோணம் தொகுதியின் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், துரைமுருகன் இல்லத்துக்கு மாலை 6.30 மணியளவில் திடீரென வருகை தந்தார். வீட்டுக்குள் சென்று 15 நிமிடம் கழித்து அவர் மட்டும் வெளியே வந்தார்.
அவரது திடீர் வருகை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, உதயசூரியனுக்கு ஓட்டுப்போடுங்க என சிரித்தபடி கையெடுத்து கும்பிட்டுவிட்டு காரில் ஏறி கிளம்பிவிட்டார்.
இதுதொடர்பாக விசாரித்தபோது, ஜெகத்ரட்சகனிடம் தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்கியிருந்தேன் என வருமானவரித்துறையினரிடம் குறிப்பிட்டுள்ளார். அதனை உறுதி செய்துக்கொள்ள அவரை வருமானவரித்துறையினர் வரவழைத்ததாக கூறுகின்றனர் அங்கிருந்த கட்சியினர்.