![MK Stalin condemn for arakkonam incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/7HmKZOocMgpqaPGqRoCfeULYBYZjCDQxJK1BymvJEg0/1617967444/sites/default/files/inline-images/t-1_0.jpg)
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் எனும் கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் முன்விரோதம் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், “அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. சட்டமன்றத் தேர்தல் என்பது ஜனநாயகத்தில் நடைபெறும் ஒரு திருவிழா. அதில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெறுவதும் - ஆக்கப்பூர்வமான முறையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதும் மட்டுமே ஜனநாயகத்திற்கும், பொது அமைதிக்கும் வலு சேர்க்கும். இந்த நிகழ்வைப் பொறுத்தமட்டில் – தேர்தல் நேரத்தில் நடைபெற்ற மோதல், இப்போது இருவர் சாதிய வன்மத்துடன் கொலை செய்யப்பட்டுள்ள அவலத்தில் முடிந்திருப்பது கண்டனத்திற்குரியது. கொலை செய்யப்பட்ட இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமையும் வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் - எங்கும் - யாராலும் பொது அமைதிக்குப் பங்கும் விளைந்து - பொதுமக்களின் நிம்மதியைக் குலைக்கும் நடவடிக்கைகள் அரங்கேற அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
எத்தனை கருத்து மோதல்கள் தேர்தல் களத்தில் இருந்தாலும் - தேர்தலோடு அவற்றை மறந்து விட்டு - தமிழக மக்கள் அனைவரும் சகோதரர்களாக - சமூக நல்லிணக்கத்துடன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
எனவே, தமிழகக் காவல்துறைத் தலைவர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு - மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் அவரவர் பகுதிகளில் சட்டம் - ஒழுங்குப் பணிகளை நிலைநாட்டுவதில் எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது என்றும் - சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து - கைது செய்து - சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.